Tuesday, April 12, 2011

மும்பை சென்ற ஜனாதிபதிக்கு மரியாதை இல்லை

மும்பை சென்ற ஜனாதிபதிக்கு மரியாதை இல்லை:ஒளிப்படம் ஒன்றுகூட எடுப்பதற்கு விடவில்லை

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண மும்பைக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா உரிய மரியாதைகளை வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அழையாவிருந்தாளியாக அவர் சென்றதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.


"மும்பை மிரர்" பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கு உரிய மரியாதைகள் வழங்கப்படாது அவர் புறக்கணிக்கப்பட்டமை குறித்து இலங்கை அதிகாரபூர்வமாக முறையிடாத போதும் அதிகாரிகள் தமது அதிருப்தியை ஊடகவியலாளர்களிடம் வெளிப்படுத்தி உள்ளனர்.
ராஜபக்ஷவுடன் சென்ற பரிவாரங்களுக்கு கேட்டளவு இருக்கைகளை இந்திய அதிகாரிகள் ஒதுக்காது விட்டதும், போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இரு அணியிருக்கும் ஜனாதிபதி அறிமுகம் செய்து வைக்கப்படாமை ஆகியவையே முக்கிய இழிவுபடுத்தல்களாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மும்பையிலுள்ள இலங்கைத் துணை தூதுவர் உபேக்ஷா சமரதுங்க,"ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கான இருக்கைகளை வெளிவிவகார அமைச்சே ஒழுங்கு செய்தது. அவர்களுக்கு இன்னும் அதிக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாட்டத்தைக் காண இலங்கைக்கு 40 இருக்கைகளை ஒதுக்கித் தருமாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக இந்தியக் கிரிக்கெட் சபைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் குறுகியகால இடைவெளிக்குள் அதனை ஏற்பாடு செய்ய முடியாது போனதால் 10 இருக்கைகளை மட்டுமே இந்திய அதிகாரிகள் ஒதுக்கினர்."துடுப்பாட்டச்சபைத் தலைவரின் அறையில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் தலா 10 ஆசனங்களை மட்டுமே எம்மால் ஒதுக்க முடிந்தது'' என்று கூறினார் இந்திய துடுப்பாட்டச் சபையின் பிரதான நிர்வாக அதிகாரி ரத்னகார் ரெட்டி.

அதேவேளை, சில வாரங்களுக்கு முன்னரே இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு சார்பில் 40 ஆசனங்களை வாங்கியிருந்தது. அவற்றைப் பயன்படுத்துமாறு இலங்கைப் பரிவாரத்தில் சிலருக்கு அறிவிக்கப்பட்டது.இறுதி ஆட்டம் ஆரம்பமாவதற்குச் சற்று முன்னர் குறைந்தது இலங்கை அணி வீரர்களையாவது சந்திப்பதற்கு ஜனாதிபதி விரும்பினார். அவரது வேண்டுகோளை இந்திய அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனால் சிறிலங்கா அதிபரும் அவரைச் சார்ந்தவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்ததாக மகாராஷ்டிரா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொகாலியில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக மைதானத்தில் அணி வீரர்களைச் சந்தித்திருந்தனர். போட்டி தொடங்க முன்னர் ஜனாதிபதி அணி வீரர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததை உறுதி செய்துள்ள மும்பையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் சமரதுங்க, கடைசி நேரத்தில் இந்திய அதிகாரிகள் அந்தத் திட்டத்தை மாற்றி விட்டனர் என்று கூறினார். ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியுடன் ஓர் ஒளிப்படம் எடுக்கும் வாய்ப்புக் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவில்லை எனறும் அவர் விசனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்திய அரசினால் மகிந்த ராஜபக்ஷ அழைக்கப்படவில்லை. அவர் தனது விருப்பின் பேரிலேயே இங்கு வந்தார். பாகிஸ்தான் பிரதமர் கிலானி, மொஹாலிக்கு எமது விருந்தினராகவே வந்தார். அதனால் அவருக்கு மைதானத்தில் வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது'' என்று அவர் தெரிவித்தார் என "மும்பை மிரர்" செய்தி வெளியிட்டுள்ளது.