நிபுணர் குழுவின் போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏன் அவசியம் என்பது தொடர்பாக விளக்குகிறார், சிங்களப் பத்தி எழுத்தாளரும் அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது மேற்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பவருமான சுனந்த தேசப்பிரிய. ராவய பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அந்த விமர்சனப்பத்தியின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது.
இலங்கையில் நிலவும் இனப்பூசலுக்குக் காரணமான மோதலுக்கு பேச்சு மூலம் தீர்வுகாண எந்த ஒரு வாய்ப்பும் இந்த நாட்டில் இதுவரை அமையவில்லையா? என்றொரு கேள்வி எம்முன் உள்ளது. இந்த வினா, அதாவது யுத்தத்துக்கு மூலகாரணியான தமிழ் மக்களது சமூக அரசியல் கலாசார உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அரசி யல் தீர்வொன்றை முன்வைத்தல் என்பது இன்று முக் கிய கட்டத்தை அடைந்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற இருதரப்புகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் மூலம் இந்தக் கேள்வி மேலும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
வாய்ப்புகள் வீணடிப்பு.
இனப்பிரச்சினைக்குப் பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால் 2006ஆம் ஆண்டளவில் பேச்சு மூலமான தீர்வொன்றைக் காண்பதற்கான சூழல் இருக்க வில்லையென ஒருவரால் வாதிட முடியும்.ஏனெனில் அந்தக் கால கட்டத்தில் இந்த இரு தரப் புக்களுமே போர் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தன. 2005ஆம் ஆண்டின் பின்னர் எழுந்த காலகட்டமானது பேச்சு மூலம் அமைதியை ஏற்படுத்தும் வாய்ப்பை நிராகரித்தது. ஏதாவது ஒரு தரப்பு போரில் வெற்றிபெற்ற பின்னர் மட்டுமே அமைதி சாத்தியமாகக்கூடும் என்று, தத்தமது பலத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரனும் மஹிந்த ராஜபக்ஷவும் நம்பினர்.
உண்மையில் அந்தக் காலகட்டத்தில், போர்ப் பலத்தை நம்பாது மனிதாபிமான ரீதியில் பிரச்சி னையை அணுகி அதனைத் தீர்த்துக் கொள்வதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையே இருந்தது. ஆனால் அப்படிச் செய்வது இரு தரப்புகளுக்கும் வேண்டிய தீர்வு ஒன்றைத்தராது என்ற நிலையே இருந்தது. அதுமட்டுமல்லாது அத்தகைய சமாதான முயற்சி பேச்சு மூலமான முயற்சி அதிக காலத்தைக் கோரி நின்றது. அந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்கு அரசுக்கும் பிரதான எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படுவதும் அவசியமாக இருந் தது. அந்த இணக்கத்தை ஏற்படுத்தக் கிடைத்த இறுதி வாய்ப்பை 2004ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது அதிகார பலத்தின் மூலம் சிதைத்தார். தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார்.
ஆனால், இரு தரப்புகளும் அதுபற்றிக் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் போர் வெற்றியின் மீது அவை நம்பிக்கை வைத்திருந்தன. அந்த வெற்றிக்காகச் செலுத்த வேண்டி இருந்த மனித விலை மற்றும் சமுதாய ரீதியான விலை, போரின் மூலம் ஏற் படக்கூடிய நீண்ட கால விளைவுகள் தொடர்பிலான எந்தவொரு ஆதங்கமும் இருதரப்புக்களிடமும் இருக்கவில்லை. இத்தகைய ஒரு பின்புலத்தில் இலங்கையில் அப்போது நடந்த சமாதான முயற்சிகளின் அர்த்தம் பிரதிவாதியை அன்பு, அரவணைப்பு மூலம் வென்றெ டுப்பதாக இருக்கவில்லை. பேச்சு மேசையில் ஒருவரை ஒருவர் எப்படித் தோற்கடிப்பது என்பதாகவே இருந்தது. 2006ஆம் ஆண்டளவில் போர்ப் பலம் என்ற துலாக்கோலில் இலங்கை அரசின் பக்கமே கனதி யானதாக இருந்தது. மனித மற்றும் பௌதிக வளங்கள் என்ற கோணத்திலும் சர்வதேசத் தொடர்பாடல்கள் என்ற கோணத்திலும் கூட மூலோபாய சாதகங்களைக் கொண்டிருந்த இலங்கை அரசு போரில் வெல்லும் என்பது முன்கூட்டியே தெரியத்தக்கதாக இருந்தது.
மஹிந்தவுக்கு ஆர்வமில்லை.
"எமது நாட்டுச் சிப்பாய்கள் ஒரு கரத்தில் சுடுகலன்களையும் மறுகரத்தில் மனித உரிமைகள் சாசனத்தையும் ஏந்தியவாறுதான் போர்க்களம் சென்றனர்'' என்று ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அதன் உண்மை பொய் பற்றித் தீர்மானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம். நானறிந்த வகையில் போர்ப் பூமியில் இருந்த எந்தவொரு ராணுவ முகாமிலும் ஐ.நா. மனித உரிமைகள் சாசனம் உள்ளடங்கிய சுவரொட்டியொன்று கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
போர் முன்னெடுப்புகளைப் பெரிதாகப் பேசுகின்ற, மோசமான போர் வெறியை ஊட்டுகின்ற முழுவதும் இனவாத அரசியல்மயப்பட்ட வாசகங்களையே அந்த முகாம்களில் காண முடிந்திருந்தது. அன்று போரைப் பற்றியோ, மனித உரிமைகளைப் பற்றியோ வாய்திறப்பவர்கள் கொல்லப்பட வேண்டிய துரோகிகளாகவே கருதப்பட்டனர். மறுபுறத்தில் போருக்குச் சமாந்தரமாக தமிழர் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட பிரிதொரு அரசியல் செயற்பாட்டையும் ராஜபக்ஷ அரசு ஒப்புக்காகவேனும் முன்னெடுத்தது. அது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் பேச்சு.ஆனால் எந்வொரு சந்தர்ப்பத்திலும் "ஒருகரத்தில் அரசியல் தீர்வொன்றையும் கொண்டுதான் நாங்கள் போர்க் களம் சென்றோம்'' என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்ததில்லை. அந்த அனைத்துக் கட்சிப்பேச்சுக்களின் பெறுபேறாகக் கிடைத்த அரசியல் தீர்வு யோசனைகள் போர் முடிவுற்ற கையோடு குப்பைக் கூடைக்குள் போடப்பட்டமையே அதற்குக் காரணம். ராஜபக்ஷ அரசின் யுத்தக் கோட்பாட்டினுள் அதிகாரப் பகிர்வு என்ற எண்ணக்கருவுக்கு எப்போதுமே இடமே இருந்ததில்லை. ஆனாலும் போர் முடிந்து விட்டது என்பதை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அங்கு 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமெனச் சபதமிட்டார்.
புதுடில்லியில் அவர் அதனைச் சொல்லும் போது அதிகாரம் பகிரப்படுவதை முழு மூச்சில் எதிர்த்த தீவிர தேச பக்தர்கள் பலரும் ராஜபக்ஷ அரசில் இருந்தனர். அவை கடும்போக்கு சிங்கள தேசியவாதத்தைச் சுமந்து நின்றன. மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிகஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பனவே அவையாகும்.இந்த அரசியல் சக்திகள் தற்போதும் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றன. மதம் சார் மற்றும் கருத்தியல் தலைமைத்துவத்தை வழங்கும் குழுவொன் றினால் இந்த அரசியல் கட்சிகளுக்குப் புதிய யோசனை யொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தூண்டிவிடப்படும் சக்திகள்இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளதால் அதனுட னான அமைதிப் பேச்சை உடன் நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே அந்த யோசனையாகும்.
அதை அடியொற்றியே முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பேச்சுக்கான அரச குழுவில் இருந்து விலகினார். உண்மையைக் கூறுவதானால் இவர்களில் எவருமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் தீர்வொன்றுக்குச் சார்பாக நின்றதில்லை. நிபுணர் குழு அறிக்கையை சாதகமானதொரு வாய்ப் பாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களது அரசி யல் அபிலாஷைகளை நசுக்கி விடுவதற்கு இவர்கள் எத்தனிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது இவ்வாறிருக்க பான் கீமுனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நட வடிக்கைக்கும், அரசியல் தீர்வு ஒன்றை வலியுறுத்தும் எவரொருவரும் இணைத்துக் கொள்ளப்படக் கூடாது எனவும் மேற்படி தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.
மறுபுறத்தில் பான் கீமுனின் அறிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அரசின் பங்காளிகளான கம்யூனிஸ்ட், மற்றும் சமசமாஜக் கட்சிகள், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற் றப்படும் விதத்தில் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.ஐக்கிய தேசியக் கட்சியும் கூட இன்றைய சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படுவது அவசியம் என்று கூறுகின்றது.
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் ஐ.நா. அறிக்கையை எதிர்த்துள்ளது. எனினும் இராஜதந்திர வார்த்தைகளில் அது இந்த விடயத்தைக் கையாள்கிறது. ஐ.நா. செயலாளரின் அறிக்கையை அனைவரும் ஓரணியில் நின்று எதிர்க்கத்தக்க வகையிலான ஜன நாயக உரிமைகளை நாட்டில் உறுதிப் படுத்துமாறு அது அரசிடம் வலியுறுத்தி உள்ளது.மறுபுறத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரச பேச்சுக் குழுவில் இருந்து விலகியதை ஒரு பொருட்டாகக் கருதாது அரசியல் தீர்வொன்றை எட்டும் பேச்சுக்குத் தாம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசிடம் மாற்றுத் திட்டம்
இத்தகைய ஒரு சூழலில் தமிழ்க் கட்சிகளுட னான பேச்சில் இருந்து விலகும்படி சிங்களக் கடும் போக்குவாதச் சத்திகள் முன்வைக்கும் கோரிக் கைகளை நிறைவேற்ற இப்போது அரசு தயாராக இல்லை. பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றைக் கையாள்கிறது.புலிகள் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச் சின் போது உறுப்பினராக இருந்தவரும் அமெரிக்க ஆதரவாளருமான மிலிந்த மொறகொடவை வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான ஜனாதி பதி ஆலோசகராக அது நியமித்துள்ளது. அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட் டத்தின் சிற்சில விதிகளைத் தளர்த்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் தகவலறிய முடிந்துள்ளது.ஆனாலும் போரின் மூல காரணியான தமிழ் மக்க ளது சமூக அரசியல் மற்றும் கலாசாரம் சம்பந்தமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. 70 ஆயிரம் மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட் டத்தில் பாதுகாப்புக்காக 70 ஆயிரம் இராணுவத் தினர் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று செய்தி யொன்று கூறுகிறது. போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசு எந்தளவு தூரம் திறனற்றுப் போயுள்ளது என்பதை அச்செய்தி தெளிவுபடுத்துகிறது.இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளின் மத்தி யில் தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினம். போர் மனோபாவத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இலங்கையின் அரசியல் மனோ பாவமானது எப்போதுமே தமிழ் மக்களை அடி மைப்படுத்தி வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. மாறாக உரிமைகள் வழங்கப்படக் கூடியதொரு சமூகமாக தமிழர்களைத் தெற்கு ஒருபோதும் கருதுவதில்லை.
நீண்ட கால ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்ப டுத்தும் போர் மனோபாவத்தின் ஒரு கோணமே இதுவாகும். இலங்கை அரசிடம் காணப்படும் அடுத்த கோணம் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளுடனான சமூகம் ஒன்றுக்குப் பதிலாகத் தான்தோன்றித்தனமான நிர்வாகமொன்றே அவசி யப்படுகிறது என்று எண்ணத் தலைப்படுகிறது.
உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்இத்தகைய காரணங்களை முன்னிட்டே யுத்தம் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான பேச்சு களும் அழுத்தங்களும் எமக்கு அவசியமாகின்றன. மற்றப்படி, மஹிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலிக்கு அனுப்புவதற்காக அல்ல.
அதாவது, யுத்த மனோ பாவத்திலிருந்து வெளி யேறி அதைக் கைவிட்டு போரின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மூலகாரணி களுக்குத் தீர்வுகளை வழங்கி, அதற்கு இரையாகிப் போயுள்ளவர்களுக்குச் சரி யான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற் காகவே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண் டுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது. அதிலிருந்து நழுவிச் செல்வதற்கு முயற்சிப்பதானது பிரச்சி னையை நிரந்தரமாக்கிவிடும்.