மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. இலங்கையின் அரசியல் நிலை தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அவர் எழுதிய ஆய்வு இது. இன்றைய அரசு ஒரு பயங்கரவாத அமைப்புப் போன்றே செயற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டுகிறார் அவர். அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது.
இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது ஏ9 நெடுஞ்சாலை. அதில் படையினரின் கடைசி சோதனைச் சாவடியைத் தாண்டியதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குவதற்காக விடுதலைப் புலிகள் ஆவணங்களைச் சோதிக்கும் அலுவலகத்தை அடைந்தோம்.
இது 2002இல் நடந்தது. அன்று அந்தப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்த எவருமே இரண்டு நாடுகளுக்கு இடையில் தாம் பயணிப்பதாகவே உணர்ந்தனர். இலங்கையில் உள்ள பலருக்கும் ஜனநாயகம் பழக்கமானதுதான். பன்மைத்துவ ஊடகங்கள், உரிமைப் பிரச்சினைகள் குறித்த நடவடிக்கையாளர்களின் விவாதங்கள், பல அரசியல் கருத்தியல்களுடன் கூடிய மக்கள், பொருளாதார வாய்ப்புக்கள் தொடர்பான விவாதம் என்பன ஒரு நாட்டினை நிதானத்துடன் பேணக்கூடிய சிறப்பான அம்சங்களாகும். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்த போரால் இலங்கையில் அவை அனைத்தும் இழக்கப்பட்டன என்றே தோன்றுகிறது.
வன்னி அரசியல் புலிகள் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடினார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதற்கு முரணான வகையில் சுதந்திர தமிழீழம் என்பது பயமுறுத்தும் வகையிலானதாக இருந்தது. தலைவர் பிரபாகரனின் உருவப் படங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தன. அவருடைய படையினர் எங்கும் இருந்தனர்; அதுபோலவே தகவல் சொல்லிகளும் எல்லா இடங்களிலும் பரந்திருந்தனர். சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம், கல்வி என்று அனைத்தையும் கையாள்வதற்கான ஏகபோக உரிமை புலிகளிடம் மட்டுமே இருந்தது. புலிகளின் பெருமைகளைப் பாடுவதற்கான ஒரே அலைவரிசையிலேயே ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
இவை தொடர்பில் கிராமவாசிகள் இரகசியமாகவே முறையிட்டார்கள். இதனால் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை, நாம் தனித்து மூலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எனவே முறைப்பாட்டாளர்களால் வெளிப்படையாக எதனையும் கூறமுடியவில்லை.
அங்கு சுதந்திரமான பயணத்துக்கு இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து எவரும் தனது உறவினரைப் பிணை வைக்காமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கிராமவாசிகள் எம்மிடம் சொன்னார்கள். தமது பிள்ளைகள் பதின்ம வயதுக்குள் காலடி வைத்ததும் பெற்றோர்கள் துக்கம் அனுஷ்டிக்க ஆரம்பித்தார்கள். ஏனெனில் விரைவிலேயே பிள்ளைகள் போருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள். இப்படித் தமது அன்புக்குரியவர்களில் பலரை பெரும் எண்ணிக்கையிலானோர் இழந்திருக்கின்றனர். எவரும் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அங்கு இடமிருக்கவில்லை.
பிரபாகரன் வன்னியில் செய்தியாளர் மாநாடு நடத்தியபோது நாம் அங்கிருந்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக தான் இருந்தது குறித்து அவர் சிறிதளவே வருத்தப்பட்டார் என்று தோன்றியது.
மனித உரிமைகள் தொடர்பிலான முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற விடயதை ஏற்க அவர் தயாராக இருக்கவில்லை. போர் நடப்பதே இவற்றுக் கான காரணம் என்று சாதாரணமாகச் சொல்லி எம்மைத் திருப்திப்படுத்தவே அவர் முயன்றார். அந்தச் சமயத்தில் பெரும்பாலோர் அவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றே எண்ணினர். அவரால் ஆயுதங்களையும் பணத்தையும் தாராளமாகப் பெறமுடிந்தது. நண்பர்கள் பலரும் அவருக்கு இருந்தனர் என்றே அப்போது தோன்றியது.
தலைகீழான நிலைமை
இருப்பினும் 2009 மே மாதத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இலங்கை இராணு வத் தின் மூர்க்கத்தமான தாக்குதலில் பிரபாகரனும் அவரது மூத்த தளபதிகளும் இறந்து போனார்கள். இந்த இரத்தக் களரியான போர் முடிவதற்கு மூன்று வருடங்களுக்கும் கொஞ்சம் அதிகமான காலம் அதற் குத் தேவைப்பட்டது. இதனை அடுத்து இலங்கைக்கு அமைதியும் சுபீட்டசமும் மிக்க எதிர்காலம் ஒன்று இருப்பதாக பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது இதுவரை தெற்கில் இருந்துவந்த சுதந்திரம் வடக்கிலும் இனி வீசும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக மோசமானது என்னவென்றால் இலங்கை தவறான பாதையில் வழிநடத்தப்படுகின்றது என்ற உண்மைதான்.
மஹிந்த மற்றொரு பிரபா
பிரபாகரன் தனது போரில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால், எதேச்சதிகாரப் போக்கு, தனி மனித ஆளுமையை முதன்மைப்படுத்திய அரசியல் (முகஸ்துதி அரசியல்), ஒருதலைப்பட்சமான ஆவேசமான சுய விளம்பரம், குற்றங்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கு மறுப்பது போன்ற பிரபாகரனின் கலாசாரமே இலங்கையில் இப்போது மேலோங்கி வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ அலை மக்கள் மத்தியில் பெருமளவில் காணப்படுகிறது. பிரபாகரனது உலகில் பத்தியாளர்களின் விதி என்னவோ அதுவே இன்றைய இலங் கையில் பத்திரிகையாளர்களுக்கும் விமர்சகர்களுக் குமான விதி. கைது, சித்திரவதை, கொலை, காணாமல் போதல் என்பன இந்த உலகில் சாதார ணம். பிரபாகரனின் பயங்கரக் கனவிலிருந்து இலங்கை என்ற நாட்டை வேறுபடுத்தக்கூடிய நீதிமன்றங்கள், சுதந்திரமான சிவில் சமூகம் மற்றும் ஆக்கபூர் வமான எதிர்க்கட்சிகள் என்று அனைத்துமே கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன.
மாற்றுக் குரல்கள் இப்போது அமைதியாகிவிட்டன. அதனால் மக்கள் தமது முறைப்பாடுகளை இரகசியமாகவே மேற்கொள்கி றார்கள். ஒரேயொரு விடயத்தை மட்டுமே பாடுபொருளாகக் கொள் ளுமாறு ஊடகங்கள் அனைத்தும் ஊக்கப்படுத்தப்படுகின்றன. அரசின் பெருமைகளைக் கொண்டாடுவது என்பதே அந்தப்பாடு பொருள். 2009 போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் எந்தவொரு மனித உரிமை மீறல் பற்றி எவரொருவர் பேசினாலும் அது எதிரியின் பரப்புரை என்று கூறி நிராகரிக்கப்படுகிறது. இந்த நிலைப்பாட்டில் தாம் வெல்ல முடியும் என்றும் இலங்கை அரசு நம்புகின்றது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதர், "எமக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்'' என்று அதனால்தான் பிரகடனப்படுத்தினார்.
போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற சண்டையில் புரியப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள்தான் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் இதயம். போரின் போது புலிகளும் பல மீறல்களுக்குக் காரணமாக இருந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல. இராணுவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்றவர்களைச் சுட்டுக் கொன்றார்கள். பொதுமக்கள் கூடியிருந்த இடங்களுக்கு அருகே ஆட்லறி எறிகணைகளை நிலைப்படுத்தினார்கள், சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் போராளிகளாக்கினார்கள், பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
ஆனால், அரச படையினரும் இதற்கு நிகராக அல்லது மேலான அட்டூழியங்களில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது. வைத்தியசாலைகள் மீது பகுத்தறிவற்றதனமாகப் பரவலான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் வலயத்துக்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வேண்டு மென்றே திட்டமிட்டுத் தடுத்துள்ளனர்.
2009 மே மாதத்தில் பேர் முடிவடைந்தபோது, மிக மோசமான நிலையில் இருந்த தடுப்பு முகாம்களில் 3 லட்சம் பொதுமக்களை அரசு காவலில் வைத்திருந்தது. அரச படையினரால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் பின்னர் காணாமல் போயுள்ளனர். அத்தோடு தமது தடுப்புக் கைதிகளில் பலருக்கு அரச படையினர் மரணதண்டனை விதிக்கும் வீடியோ ஆதாரங்களும் உள்ளன. அவர்களில் சிலர் சண்டையில் கொல்லப்பட்டார்கள் என்று அரச படையினர் அறிவித்தவர்கள்.
நிபுணர் குழு அறிக்கை
ஐ.நா. பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அறிக்கை அரச படையினரின் அட்டூழியங்களை உறுதிப்படுத்துகிறது. போர்க் குற்றங்களுக்காக இரு தரப்பினரையும் அந்த அறிக்கை சாடு கிறது. நீதியை நிலைநாட்டவும் பொறுப்புக்கூறவும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம் என்று அது வலியுறுத்துகிறது. நிபுணர் குழுவின் அந்த அறிக்கை, அரசு மற்றும் புலிகள் பொதுமக்களின் உரிமைகள், நலன்கள், உயிர் என்பவற்றைப் பாதுகாப்பதற்குத் தவறி இருக் கின்றனர். அதன் மூலம் அனைத்துலகச் சட்டதிட்டங்களை மீறியிருக்கின்றன என்று கூறுகின்றது.
சண்டை நடந்த இடங்களுக்கு சுயாதீனத் தரப்புக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவரும் நிலையில், போரில் உண்மையில் எத்தனைபேர் இறந்தார்கள் என்று அறிந்துகொள்வது மிகக் கடி னம். அதேவேளை, இறந்தவர்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருக்கும் என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை கூறுகின்றது. "பல தரப்புக்களின் தரவுகளின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயி ரத்தை எட்டக்கூடும் என்பதை நிராகரிக்க முடியாது'' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அனைத்துலக ரீதியில் அங்கீ கரிக்கப்பட்ட மூன்று நிபுணர்களால் கவனமாகவும் தொழில் நேர்த்தியுடனும் விடயங்கள் அலசி ஆரா யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்டது. இது நிச்சயம் தீவிரமான கவனத்துக்கு எடுக்கப்படவேண்டும். ஆனால் இலங்கை அரசோ, இந்த அறிக்கையை "பக்கச்சார்பானது'', "சட்டவிரோதமானது'',அடிப்படையில் ஆதாரங்கள் அற்றது என்று தெரிவிக்கிறது. இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். அத்துடன் நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப் படையில் ஐ.நா. நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்ற அழுத்தங்களையும் திரட்டி வருகிறது அரசு.
குற்றச்சாட்டுக்களை எல்லாம் மூடிமறைப்பதற்கு அவர்கள் ஒரு போர்வையைப் பயன்படுத் துகிறார்கள். அதுதான் "எந்த ஒரு பொதுமகனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது'' என்ற கொள்கையுடன் கூடிய "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை'' என்கிற அரசின் கோஷம்.
எதிர்ப்பும் நிராகரிப்பும்
அரச படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட இலங்கையின் உயர் மட்டத்தினர் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். ஒருபடி மேலே போய், எதிர்கால தேசிய நல்லிணக்கத்துக்கு ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஆபத்தாக அமையும் என்று எச்சரித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறை என்ற பெயரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கடந்த ஆண்டு அரசு நியமித்தது. ஆனால் இந்த ஆணைக்குழுவில் "ஆழ மான குறைகள்'' இருப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆணைக் குழு சர்வதேச தரத்துக்கு இருக்காது என் றும் பொறுப்புக்கூறுதலைச் சரிவர நிறைவேற் றாது என்றும்கூட அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட இத்தகைய ஆணைக்குழுக்கள் நீதியை நிலைநாட்டுவதற்குத் தவறி இருந்தன. 2008ஆம் ஆண்டில் இத்தகைய ஓர் ஆணைக்குழுவின் விசாரணையைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர்கள் அடங்கிய குழு, விசாரணையில் காணப்பட்ட திருப்தியின்மை காரணமாக அதிலிருந்து வெளியேறி இருந்தது. "வெளிப்படைத்தன்மையே இல்லாமல் விசா ரணை நடக்கிறது. விசாரணை மற்றும் புலனாய் வுக்கு அடிப்படையான அனைத்துலகத் தரம், சட்ட திட்டங்கள் பேணப்படவில்லை'' என்று அந்த நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
அதே தவறுகள்
இந்த 26 ஆண்டுகாலப் போரில் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் வெற்றி கொள்வதற்கு முடிந்த முக்கிய காரணங்களில் ஒன்று, அந்த அமைப்புத் தனது நண்பர்களை இழந்தமை. இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் உரிமை கள் விடயத்தில் ஆதரவானவர்கள்கூட, புலிகளின் மனித உரிமை மீறல்களால் குறிப்பாகச் சிறுவர் களைப் படைகளில் சேர்த்துக் கொண்டமை மற் றும் தமிழ் மக்களிடம் இருந்து பலவந்தமாகக் கப்பம் பெற்றமை போன்றவற்றால் வெறுத்துப் போனார் கள். அதன் விளைவு, பல நாடுகளில் புலிகள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டார்கள். இது நிதியைப் பெறுவதையும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதையும் பாதித்தது.
மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட் டுக்களில் இருந்து தன்னைக் காப்பதற்கு தனது "நண்பர்கள்'' தனக்கு அரணாக இருப்பார்கள் என்று இப்போது இலங்கை அரசும் கூறிவருகிறது. போர் இடம்பெற்று வந்த சமயத்தில் மனித உரி மைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதும் அனைத்துலக சமூகத்தின் பெரும் பகுதி இலங்கைக்கு ஆதரவாகவே இருந்தது. அதனால் இலங்கையின் நண்பர்களுக்கு போர்க் குற்றங்கள் தொடர்பில் நேர்மையான நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளுடன் அவர்கள் சேர்ந்து கொள்வதோ, போர்க்குற்றங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதோ சிக்கலானதுதான். இருப்பினும் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இது விடயத்தில் பேச வேண்டியது அவசி யம். இந்த நாடுகள் இலங்கையின் நம்பிக்கைக் குரியவை. போருக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. அதனா லேயே அவை வெளிப்படையாகப் பேசவேண்டி இருக்கின்றது. ஆனால், போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று சீனா வும் ரஷ்யாவும் நினைக்கின்றன. இலங்கையை வெளிப்படையாக விமர்சிப்பதிலும் பார்க்க அதன் மீதுள்ள தமது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும் என்று இந்தியாவும் ஜப்பானும் வாதிடுகின்றன.
இந்தியா திருந்த வேண்டும்
இலங்கை அரசு தனது குடிமக்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடூரங்கள் தொடர்பில் மட்டும் இந்தியா மௌனமாக இருக்கவில்லை. இலங்கை மீது அனைத்துலகக் கண்காணிப்பும் அழுத்தங்க ளும் விழுவதில் இருந்தும் அதனை வினைத்திறனுடன் கடந்த காலங்களில் பாதுகாத்திருக்கிறது. போர் முடிந்து சிறிது காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதர வளித்தது. இதனால் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக் கப்பட்டது.
இலங்கையில் அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தியா ஏற்கனவே அதிக விலை கொடுத்துள்ளது. 1980களில் இலங்கையில் அமைதிப் பணியில் ஈடுபட்ட 1,000 படையினரின் உயிர்களை இந்தியா இழந்துள்ளது. ராஜீவ் காந்தியைப் புலிகள் படு கொலை செய்தார்கள்.
இப்போது, இலங்கையில் போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை ஊக்குவிக்கக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் பக்கம் இருப்பதற்குப் பதிலாக, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்த விரும்பும் அரசுகளுடன் இணைந்து இந்தியா இப்போது நிச்சயம் பணியாற்ற வேண்டும்.
இந்த விடயத்தில் இந்தியா மீண்டும் பின்தங்கக் கூடாது. இந்தவேளையில் வெளிப்படையாகப் பேசுவதன் மூலமே, இலங்கையிலுள்ள சகல இன மக்களும் அமைதிமிக்க ஜனநாயக எதிர்காலத்தைப் பெறுவதை இந்தியாவால் உறுதிப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment