Monday, May 19, 2008

ஈரான் வரை சென்ற முஸ்லிம் முதலமைச்சருக்கான கோரிக்கை

ஈரான் வரை சென்ற முஸ்லிம் முதலமைச்சருக்கான கோரிக்கை
[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008, 05:39 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நியமிக்க சிறிலங்கா அரச தலைவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரச தலைவரை கோரிக்கை விடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியாவருவதாவது:

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர், முதலமைச்சராக பிள்ளையானே நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக அடிபட்ட போதும், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத காரணத்தினால் ஒன்றும் செய்துகொள்ள முடியாத நிலையிலிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திராலோசனை நடத்தினர்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும் பிள்ளையானே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற உறுதியான ஊகங்கள் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்றதனை அடுத்து, அதற்குள் அதனை தடுத்து நிறுத்த எண்ணிய முஸ்லிம் அமைச்சர்கள், வெளிநாடுகளின் மூலம் இராஜதந்திர அழுத்தத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவது என முடிவெடுத்தனர்.

இதன்படி, அயல் நாடொன்றின் தூதரக அதிகாரிகளை அணுகி, தமது பிரச்சினையை கூறி, மகிந்த அரசுக்கு எடுத்துக் கூறும்படி கேட்டபோது, கிழக்கு மாகாணத்துக்கு தனியாக தேர்தலை நடத்தும் அரசின் முடிவிலேயே தமக்கு உடன்பாடில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், அதன் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் என்ன கூறவேண்டிக் கிடக்கிறது என்று அவர்கள் கைவிரித்து விட்டனர்.

இதனை அடுத்து, ஈரான் தூதுவரை சந்தித்த வெளிவிவகார பிரதி அமைச்சர் உசைன் பைலா, முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள கதியை பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஈரான் அரச தலைவரின் வருகையாலேயே ஆளும் மகிந்த ராஜபக்ச கூட்டணிக்கு கிழக்கில் அதிக முஸ்லிம் வாக்குக்குகள் கிடைக்கப்பெற்றன. முஸ்லிம்களின் வாக்குகளில் வெற்றிபெற்று விட்டு இப்போது முஸ்லிம்களுக்கே மகிந்த ராஜபக்ச துரோகம் இழைக்கப்பார்க்கிறார்.

இந்த விடயத்தை ஈரான் வெளிவகார அமைச்சரின் ஊடாக ஈரான் அரச தலைவருக்கு தெரியப்படுத்தி, மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தம் கொடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி பெற்றுத்தர வேண்டும்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று ஈரான் தூதுவரை உசைன் பைலா கேட்டிருக்கின்றார். இதற்கு தாம் முயற்சி செய்வதாக தூதுவர் உறுதியளித்திருந்தார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: