Monday, May 12, 2008

கிழக்கு தேர்தலுக்குப் பின்னான சலசலப்பு : முஹம்மட் அமீன்

மாகாணசபை வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண தேர்தலில் பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த வாக்குகள் 982,721 ஆகும். இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் 646,456 ஆகும். இதில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 54,780 ஆகும். செல்லுபடியான வாக்குகள் 591,766 ஆகும். இத்தேர்தலில் 65.78 வீதத்தினர் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

UNITED PEOPLE’S FREEDOM ALLIANCE ……………308,886 52.21% *20 Seats
UNITED NATIONAL PARTY ……………………………….250,732 42.38% 15 Seats

PEOPLE’S LIBERATION FRONT …………………………..9,390 1.59% 1 seat
TAMIZH DEMOCRATIC NATIONAL ALLIANCE ……7,714 1.30% 1 seat
EELAM PEOPLE’S DEMOCRATIC PARTY ………………5,418 0.92%
UNITED SOCIALIST PARTY …………………………………2,548 0.43%
EELAVAR DEMOCRATIC FRONT ………………………….2,275 0.38%

UNITED NATIONAL ALLIANCE ……………………………..579 0.10%
PEOPLE’S FRONT OF LIBERATION TIGERS …………..383 0.06%
AKILA ILANKAI TAMIL UNITED FRONT ……………….378 0.06%

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் சுயேச்சைக்குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் 2633 ஆகும். இத்தேர்தலில் 56 சுயேச்சைக் குழுக்கள் போட்டியிட்டன. அவற்றுள் 54 சுயேச்சைக் குழுக்கள் தனது கட்டுப் பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதகாலமாக முக்கிய கருப்பொருளாக இருந்துவந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தலின் முன்பு கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெறுபவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக தெரிவித்திருந்தது.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தே முதலமமைச்சர் ஒருவர் தெரிவாவதை விரும்பியிருந்தது. இதனடிப்படையிலேயே பிள்ளையான் அல்லது ஹிஸ்புல்லாஹ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நடைபெற்ற தேர்தலில்; ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற விருப்பு வாக்குகள் பின்வருமாறு.

41,931 பிள்ளையான்
36,419 ஜவாஹிர் சாலி முஹமட்
35,949 எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
34,318 எம்.எஸ். சுபைர்
23,456 ஜெயம்
22,176 பிரதீப் மாஸ்ரர்

எனவே கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)கிழக்கு மாகாண முதலமைச்சராக ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. (இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளிவரவில்லை). கிடைக்கும் தகவல்களின்படி பிள்ளையான் நாளை மறுதினம் (14 ஆம்திகதி புதன்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் முதலமச்சராகப் பதவிப்பிரமாணம் எடுப்பாரெனவும் தெரிய வருகின்றது.

இது இவ்வாறிருக்க. கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துக்களை நோக்குவதும் அவசியமானதாகும். இந்த அடிப்படையில் கீழே சில கருத்துக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

Mahinda Rajapaksaபயங்கரவாதத்தைத் தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த மக்கள் ஆணை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச:
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தைக் கட்டி யெழுப்புவதற்கும், நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கிழக்கு மக்கள் பூரண ஆதரவினை அளித்துள்ளனர். 2 தசாப்த காலமாக தமக்கு இல்லாதிருந்த ஜனநாயக உரிமையினை மீளப் பெற்றுக் கொள்ளவும், தமது அன்றாட நடவடிக்கைகளில் இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கைக்குக் கிடைத்த மக்கள் அங்கீகாரமாகவே இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த மார்ச்சில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலைத் தொடர்ந்து தற்போது கிழக்கில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் தேர்தலானது புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளில் ஜனநாயக உரிமைகைளை மீள நிலைநாட்ட வேண்டுமென்ற அரசின் கொள்கையின் முக்கியமான மைல்கல்லாகும். அமைதியான முறையில் கிழக்கு மாகாண வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்ற விருப்பத்தை பெருமளவானோர் வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதத்தின் பிடியினால் அவர்களின் இந்த உரிமைகள் இரு தசாபத் காலமாக முடக்கப்பட்டு இருந்தன. தேர்தலில் பங்குபற்றிய சகல அரசியல் கட்சிகள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள், ஆயுதப்படையினர், பொலிஸார் ஆகியோருக்கு தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவியதற்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

SLMC Leader Rauff Hakeemதமிழ் மக்களின் வாக்குக் கொள்ளையை சான்றுகளுடன் நிரூபிப்பேன் - மு கா தலைவர் ரவூப் ஹக்கீம்:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே பெருமளவில் மோசடி செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு எதிராகப் போராடி தேர்தல் மோசடியை குறைவடையச் செய்வதற்கான துணிச்சல் திருகோணமலை மக்களிடம் காணப்பட்டது. எனினும், மட்டக்களப்பு, அம்பாறையில் அரசால் இலகுவாக மோசடி புரிய முடிந்தது. தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கள்ள வாக்களிப்பில் ஈடுபட்டனர். பிள்ளையான் குழுவுடன் இணைந்து அரசு எவ்வாறு மோசடியில் ஈடுபட்டது என்பதை சான்றுகளுடன் தாம் நிரூபிப்போம்.

Pillayan TMVPதேர்தல் வன்முறைகள் நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை - ரிஎம்விபி பிரதித் தலைவர் பிள்ளையான்:
உள்ளுராட்சித் தேர்தலைப் போல் மக்கள் வாக்களித்து எங்களைப் பலப்படுத்தவில்லை என்பதில் கவலையடைகின்றேன். ஆயினும் உள்ளுராட்சித் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் சற்று வேறுவேறானது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இப்போது ஆட்சி அமைப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம். தேர்தல் வன்முறைகள் என்று எதுவும் இடம்பெற்றதாக எனக்கோ எமது கட்சிக்கோ எதுவும் தெரியவரவில்லை.

அப்படி ஒன்று நடந்திருந்தால் ஒரு தரப்பார் தான் அதிகம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எதிர்த்தரப்பினர் எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக வெற்றியைப் பெற்றுள்ளனர். அதை மகிழ்ச்சி அடையக் கூடிய விசயமாகத்தான் நான் பார்க்கிறேன். இன்னொரு தேர்தல் நடத்த வேண்டிய வாய்ப்பு இல்லை. நாங்கள் ஆயுதம் அரசியல் என்று குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரை எமது கட்சியினரதும் மக்களதும் பாதுகாப்புக்காக நாங்கள் ஆயுதங்களை வைத்திருப்பது தவிர்க்க முடியாதது.

தேர்தல் முடிவுகளை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். - ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க:
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொள்ளாது. அதனை நாம் நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். அரசியலமைப்பு சபையினை நியமிக்காது தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களைக் கட்டிப்போட்டு நடத்தப்பட்ட ஊழல் மோசடிகள் மற்றும் அச்சுறுத்தல்களே அரசாங்கத்தை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பல்ல. பலாத்காரமாக பெற்றுக் கொள்ளப்பட்ட தீர்ப்பேயாகும். எனவே, தேர்தலில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்துவதற்காக உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரவை கோரவுள்ளோம்.

கிழக்கில் தேர்தல் நடத்துவதற்கு முன்பு ஆயுதக்குழுக்கள், நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களது முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் ஊழல் மோசடிகள், பலாத்காரங்கள், அச்சுறுத்தல்களை அரசாங்கமும், அமைச்சர்களும் இவர்களது குண்டர்களும் மேற்கொண்டு வருவதை தேர்தல்கள் ஆணையாளருக்கு, பொலிஸ் மா அதிபர் உட்பட உரியவர்களுக்கு அறிவித்தோம். தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்ட விடயம் தொடர்பாக உரியவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய போதும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு கிழக்கு தனித்தனியாக இயங்க மக்கள் அங்கீகாரம் - அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த:
வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் மீள ஒன்றிணைக்கப்படாமல் தனித்தனியாக இயங்க வேண்டும் என்பதற்கான மக்கள் அங்கீகாரத்தையே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வெற்றி தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்ததன் மூலம் மக்கள் இனவாதத்தை புறக்கணித்துவிட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. எதிர்த் தரப்பினரின் அனைத்து வகைப் பொய்ப் பிரச்சாரங்களையும் புறக்கணித்து மக்கள் ஐக்கிய முன்னணிக்கு வாக்களித்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்துள்ளனர். வடக்கோடு இணையாமல் கிழக்கு தனி மாகாணமாக இருப்பதையே கிழக்கு மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன.

இனவாதத்தை கட்டவிழ்த்து தேர்தலில் வெற்றிபெற முயற்சித்த சக்திகளையும் மக்கள் இத்தேர்தலில் தோற்கடித்துள்ளனர்.

பகற் கொள்ளையால் பெற்ற வெற்றி - மு கா பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பர்:
அரசாங்கத்தின் கைக்கூலிகளும், அமைச்சர்களும் அடாவடித்தனமாக நடந்து கொண்டதுடன் எமது மக்களின் பல்லாயிரக்கணக்கான வாக்குகளை கொள்ளையிட்டு பெட்டிகளை நிரப்பி அரசாங்கத்தை ஒரு போலியின் உச்சத்தில் தூக்கி வைத்திருக்கின்றமை ஒரு வெட்கம் கெட்ட செயற்பாடாகும்.

இந்த மோசடிகள், வன்முறை அடாவடிகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் உடனடியாக முறைப்பாடு செய்த போதிலும் அவர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருந்து தவறியுள்ளமையும் மேற்படி சம்பவங்கள் குறித்து பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் அசமந்தப் போக்கைக் கடைபிடித்தமை ஒரு பக்கச்சார்பான நிலைமையையே தோற்றுவித்துள்ளது. கிழக்குத் தேர்தல்களில் இடம்பெற்ற அனைத்து முறையற்ற கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கும் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பு அதிகமாகவே காணப்பட்டது. தனது அதிகாரத்தின் மூலம் கிழக்குத் தேர்தல்களில் பட்டப் பகல், கொள்ளையை நடத்தி போலியானது வெறுமையானதுமான வெற்றியையே அரசாங்கம் பெற்றிருக்கின்றது.

கிழக்கில் ஒன்றுபட்டு வாழ்வதற்கு மூவின மக்கள் இணக்கம் - ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்..எம்.அஸ்வர்:
இணைக்கப்படாத கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தனித்துவம் பேணி சமாதானமாக ஒன்றுபட்டு வாழ்வதற்கான இணக்கத்தையே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்தியுள்ளன. மேற்குலக வல்லரசுகளின் துணையோடு ரணில் - ஹக்கீம் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் ஆட்டங்களுக்கு தற்போது முடிவுகாலம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் பலவந்தமாக வடக்கு மாகாணத்தோடு இ.ணைக்கப்பட்டதை கிழக்கு வாழ் மூவினமக்களும் விரும்பவில்லை. இதன் மூலம் இம்மக்களின் விகிதாசாரத்திலும் பாரிய வித்தியாசமும் ஏற்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதன் மூலம் கிழக்கு வாழ், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு கௌரவமும், தனித்துவமும் கிடைத்துள்ளது. வடக்கோடு இணைக்கப்படாத தனி கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இம்மக்கள் இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறிய அசம்பாவிதங்கள் தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு - தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க:
20 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணசபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலொன்றை ஜனநாயக ரீதியில் நடத்தி முடித்துள்ளோம். 3 மாவட்டங்களிலும் பாரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சிறு சிறு சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கக் கிடைத்தமையையிட்டு மனநிறைவு கொள்கின்றேன். இத்தேர்தலை நடத்தி முடித்ததன் மூலம் நீண்டகாலமாக பாதுகாப்பற்ற பிரதேசங்களில் நெருக்கடிகளுடன் வாழ்ந்த மக்களுக்கு சிவில் நிர்வாகத்துக்குள் செயற்பட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் தமது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்துள்ளது. தெற்கிலுள்ள ஏனைய மாகாணங்களில் வாழும் மக்களைப் போன்று கிழக்கு மக்களும் இன்று முதல் சுயமாக இயங்கும் இயல்பு நிலையை உருவாக்க முடிந்தமையையிட்டு நாம் பெருமிதமும், மன ஆறுதலும் அடைகின்றோம்.

சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றது ஐக்கிய தேசியக் கட்சி! - யுஎன்பி பா உ லக்ஸ்மன் கிரியெல்ல:
தமது கட்சி கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போகின்றது. இத்தேர்தல் மோசடிகள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தப் போகின்றோம். அரசு தனது கபடத்திட்டப்படி பாரிய வன்முறை, மோசடிகள் ஊடாக இத்தேர்தலில் வெற்றிபெற்று இருக்கின்றது. இது தொடர்பாக நாம் எழுத்துமூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளோம். வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் இடம்பெற்றமையை வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்தாவிட்டால் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

வன்முறைகள் இடம்பெற்ற வாக்குச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் அரசின் கைக்கூலிகள் என்றால் அந்த வன்முறைச் சம்பவங்களை அவர்கள் உறுதிப்படுத்த மாட்டார்கள்.

இருப்பினும், தேர்தல் மோசடிக்கெதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் முடிவெடுத்துள்ளோம். அதேபோல எவ்வாறு இந்த மோசடிகள் இடம்பெற்ற என்பதை நாம் மக்களுக்குத் தெளிபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுக்க உள்ளோம்.

ஆயுதம் ஏந்திய குழுக்களுடன் ஜனநாயகம் சாத்தியப்படாது - ஜே.வி.பி. பா உ அநுரகுமார திஸாநாயக்க:
கிழக்கு மாகாணத் தேர்தல் ஆரம்பித்திலிருந்து அரசு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலொன்றை நடத்த முயற்சி எடுக்கவில்லை. இத்தேர்தலில் அரசு செயற்பட்டது ஆயுதம் ஏந்திய குழுவுடன் கூட்டிணைந்தாகும். அந்த ஆயுதம் ஏந்திய குழு செயற்பட்ட பிரதேசங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆயுதம் ஏந்திய குழு தமது ஆயுதங்களைப் பயன்படுத்தியதா இல்லையா என்பது வேறு விடயம். இருப்பினும், அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததால் ஏனைய கட்சிகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. அதேபோல அரசு சொத்துக்கள் இத்தேர்தலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.

கிழக்கு மாகாணம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் பிரிய வேண்டுமென நாங்கள் முழுமையாக பாடுபட்டோம். பிரிப்பின் உண்மையான நிலையை மக்கள் அனுபவிக்க அவர்களுக்கு பூரண ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்திய குழுக்களுடன் இது சாத்தியப்படமாட்டாது.

தேர்தல் வெற்றி யுத்தத்திற்கான அங்கீகாரமாகும் - பாதுகாப்பு விவகார பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்குக் கிடைத்த வெற்றியானது விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான அங்கீகாரமாகும். பயங்கரவாதத்துக்கு எதிராகக் கிடைத்திருக்கும் தெளிவான மக்கள் ஆணையே இத்தேர்தல் வெற்றி. புலிகளின் பிடியிலிருந்த கிழக்கை விடுவித்திருக்கின்றோம். அதன் பின் அவர்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரத்தை வழங்கியிருக்கின்றோம். இப்போது அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இப்போது அதிகாரம் மக்கள் கரங்களில் உள்ளது. கிழக்கைப் போலவே வடக்கையும் விடுவித்து அரசியல் சுதந்திரத்திற்கான சந்தர்ப்பத்தை விரைவில் பெற்றுக் கொடுப்போம்.

தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கைகள்:
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் இன்னும் வெளிவரவில்லை. கண்காணிப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பபாடுடையதாக அமைந்துள்ளன. தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளிவந்தபின்பு அவை தனியாக அலசப்படும்.

No comments: